தென்திசை நோக்கி அகத்திய முனிவர் சென்றபோது, இத்தலம் வந்ததும் சிவபெருமானை வழிபட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. பனை மரங்கள் நிறைந்த அந்த இடத்தில் சிவபெருமான் சுயம்புவாகத் தோன்றினார். இதைக் கண்டு மகிழ்ந்த அகத்தியர், வழிபாட்டிற்கு நீரும், பழங்களும் இல்லையே என்று நினைக்க, இறைவனும் அங்கு ஒரு தீர்த்தத்தை உருவாக்கினார். பனை மரங்களில் இருந்து பழங்களையும் கீழே விழச் செய்தார். அவைகளைக் கொண்டு அகத்திய முனிவர் சிவபூஜை செய்து வழிபட்டார். பனை மரங்கள் நிறைந்த பகுதியில் அகத்தியர் வந்து பார்த்தபோது இத்தலம் உண்டான காரணத்தால் 'திருவன் பார்த்தான் பனங்காட்டூர்' என்று பெயர் பெற்றது. மூலவரும் 'தாலபுரீஸ்வரர்' என்ற பெயர் பெற்றார். பனைக்கு 'தாலம்' என்ற பெயரும் உண்டு.
இக்கோயிலில் இரண்டு மூலவர்கள் உள்ளனர். இருவரது சன்னதிகளும் அருகருகே அமைந்துள்ளன. அகத்தியர் வழிபட்ட மூலவர் 'தாலபுரீஸ்வரர்', 'பனங்காட்டீஸ்வரர்' என்னும் திருநாமங்களுடன், பெரிய லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். அம்பாள் 'அமிர்தவல்லி' என்னும் திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள்.
அகத்திய முனிவருடன் வந்த அவரது சீடரான புலஸ்தியர் வழிபட்ட மூலவர் 'கிருபாபுரீஸ்வரர்' என்னும் திருநாமத்துடன், சதுர வடிவ ஆவுடையுடன், பெரிய லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். கோபுர வாயில் எதிரே இவரது சன்னதி தான் உள்ளது. அம்பாள் 'கிருபா நாயகி' என்னும் திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள்.
தாலபுரீஸ்வரர் கோஷ்டத்தின் பின்புறம் லிங்கோத்பவரும், கிருபாபுரீஸ்வரர் கோஷ்டத்தின் பின்புறம் மகாவிஷ்ணுவும் உள்ளனர். தட்சிணாமூர்த்தி, துர்க்கை மற்றும் சண்டேஸ்வரர் ஆகியோரும் காட்சி தருகின்றனர். பிரகாரத்தில் விநாயகர், வள்ளி தேவசேனா சமேத சண்முகர், நாக தேவதை, பைரவர், சனீஸ்வரர் ஆகியோர் தரிசனம் தருகின்றனர்.
சுந்தரமூர்த்தி சுவாமிகள் இத்தலத்திற்கு வந்தபோது மதிய வேளை வந்துவிட்டதால் அனைவருக்கும் பசி ஏற்பட்டது. அப்போது ஒரு முதியவர் அங்கு வந்து அனைவருக்கும் உணவும், நீரும் அளித்து மறைந்தார். அப்போது தான் வந்தவர் சிவனே என்று உணர்ந்தனர் அடியார்கள். சிவபெருமான் உருவாக்கிய தீர்த்தம் கோயிலுக்கு சற்று தூரத்தில் உள்ளது.
இக்கோயிலில் இரண்டு மூலவர், இரண்டு அம்பாள், இரண்டு கொடி மரம், இரண்டு பனை மரங்கள் உள்ளன.
சுந்தரர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
|